கூடுதல் நேரம் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டி கோட்டை பெருமாள் கோவிலை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி; எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டு வந்ததால் பரபரப்பு


கூடுதல் நேரம் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டி கோட்டை பெருமாள் கோவிலை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி; எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2021 2:32 AM IST (Updated: 17 Oct 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டி மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை  அனுமதிக்க வேண்டி மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
முற்றுகை போராட்டம்
கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ஆன்மிக தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கோவிலில் தரிசனத்துக்கு இருந்த தடையை தமிழக அரசு நீக்கியது. இந்த நிலையில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று மதியம் நடை அடைக்கப்பட்டு, மாலையில் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து விசேஷ காலங்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூடுதல் நேரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு நேற்று மாலை 6.30 மணிஅளவில் மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் கோவிலின் முன்பு திரண்டனர்.
கூடுதல் நேரம்
இதுபற்றி அறிந்ததும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சி.சரஸ்வதி எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. கூறுகையில், “புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். எனவே விஷேச நாட்களில் சாமி தரிசனம் செய்ய கூடுதல் நேரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்”, என்றார். அதற்கு அதிகாரிகள், “உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு கோவிலில் இருந்த பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர். இதையடுத்து மதியம் 12.50 மணிஅளவில் கோவிலின் நடை அடைக்கப்பட்டது. அதன்பிறகு மாலை 4.30 மணிஅளவில் மீண்டும் கோவிலின் நடை திறக்கப்பட்டது”, என்றனர். அதன்பிறகு பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
இதுகுறித்து கோவிலின் செயல் அதிகாரி கிருஷ்ணராஜ் கூறுகையில், “வைகுண்ட ஏகாதசி விழாவின்போது மட்டுமே மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மதியம் உச்சிகால பூஜை முடிந்தபிறகு நடை அடைக்கப்படுகிறது. இன்று (அதாவது நேற்று) பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்துவிட்டு சென்ற பிறகு மதியம் 12.50 மணிஅளவில் நடை அடைக்கப்பட்டது. பிரம்மோற்சவ விழா நடப்பதால், பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. அதன்பிறகு மாலையில் மீண்டும் நடை திறக்கப்பட்டது”, என்றார்.

Next Story