ஆயுத பூஜையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் குவிந்த 200 டன் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்
ஆயுத பூஜையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் குவிந்த 200 டன் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு
ஆயுத பூஜையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் குவிந்த 200 டன் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆயுதபூஜை
ஈரோடு மாநகரில் கடந்த 14-ந் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் ஆயுதபூஜை அன்று வாழைக்கன்று, வாழை இலை, மா இலை, பழங்கள், பொரி உள்ளிட்டவற்றை படைத்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி மாநகரில் பல்வேறு இடங்களில் வாழைக்கன்றுகளை வியாபாரிகள் ரோட்டோரம் விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனா். ஆயுதபூஜை முடிந்ததும் விற்பனையாகாத வாழைக்கன்றுகளை வியாபாரிகள் அப்படியே ரோட்டோரம் போட்டுச்சென்றனர்.
200 டன் குப்பை
இதனால், மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள், கடைகளின் கழிவுகளை காட்டிலும், வியாபாரிகள் விட்டு சென்ற வாழைக்கன்று, பூசணிக்காய் போன்ற கழிவுகளே அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் மாநகரில் குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகரில் 4 மண்டலங்களிலும் தினசரி சராசரியாக 200 டன் அளவுக்கு குப்பை கழிவுகள் சேகரமாகும். ஆயுதபூஜை பண்டிகையையொட்டி அனைத்து பகுதிகளிலும் கூடுதலாக சேகரமாகி உள்ளது.
தூய்மை பணி
இதில், முக்கிய வீதிகளில் கடை அமைத்திருந்த வாழைக்கன்று வியாபாரிகள் விற்பனையாகாத வாழைக்கன்றுகள், பூசணிக்காய்களை அப்படியே விட்டு சென்றுள்ளனர். இதனை அகற்றும் பணியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முதல் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 100 டன் அளவுக்கு குப்பை, வாழை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த பணிகள் நாளை (அதாவது இன்று) வரை நடக்கும். மேலும், ரோட்டில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநகரில் ஆயுதபூஜை கழிவுகள் மட்டுமே 200 டன் வரை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story