தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அத்திமுட்லு ஊராட்சி அகரம் அருந்ததியர் காலனியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட குழியில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
-குமார், அத்திமுட்லு, தர்மபுரி.
சாலை வசதி வேண்டும்
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட மத்தாளப்பள்ளம் கிராமத்தில் சாலை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள், விவசாயிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். மத்தாளப்பள்ளத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே அங்கு சாலை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.
-ஊர்மக்கள், மத்தாளப்பள்ளம், தர்மபுரி.
தெருவிளக்கு எரியவில்லை
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா தோரமங்கலம் கிராமம் மேல்காட்டு வளவு பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை. இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கா.முருகன், தோரமங்கலம், சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் அக்கரபாளையம் ஊராட்சி பாலம்பட்டி 9-வது வார்டு காளியம்மன் கோவில் கீழ் வீதியில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
-கந்தசாமி, பாலம்பட்டி, சேலம்.
சேலம் திருவாக்கவுண்டனூர் போடிநாயக்கன்பட்டி கிராமம் கண்ணகி தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறி வருகின்றது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், போடிநாயக்கன்பட்டி, சேலம்.
சேலம் மாநகராட்சி 27-வது வார்டு சீதாராம் செட்டி ரோட்டில் காலிப்பட் செட்டியார் மரக்கடை அருகில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் ரோட்டில் வெளியேறி சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?.
-பொதுமக்கள், சேலம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் அம்மாபேட்டை குமார முத்துசாமி தெரு சவுண்டம்மன் கோவில் அருகில் குப்பைத்தொட்டி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள், இந்த தொட்டியில் தான் குப்பைகளை கொட்டுகிறார்கள். ஆனால் சரியாக குப்பைகள் அள்ளாததால் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. எனவே அங்கு குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்ராஜ், சேலம்.
மதுப்பிரியர்களால் இடையூறு
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காசக்காரனூர் காளியம்மன் கோவில் குடியிருப்பு மற்றும் ரேஷன் கடை பகுதிகளில் சில மதுப்பிரியர் மது குடித்து விட்டு இரவு நேரங்களில் ஆபாச வார்த்தைகளால் சத்தம் போட்டு பேசுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்பவர்களிடம் சண்டை போடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் குடிபோதையில் இடையூறு செய்யும் மதுப்பிரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.மணி, சேலம்.
குண்டும், குழியுமான சாலை
சேலம் அம்மாபேட்டை பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. விரைவில் பள்ளி திறக்க இருக்கும் நிலையில் அந்த சாலையை விரைவில் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேசிகன், அம்மாபேட்டை, சேலம்.
நாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரி நகரில் சேலம் செல்லும் ரோட்டில் ஏராளமான நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி பஸ் நிலையம் அருகில் ஓம்சக்தி கோவில் பின்புறத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்கள், குழந்தைகளை துரத்தி துரத்தி கடிக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-ஊர்மக்கள், பள்ளிபாளையம், நாமக்கல்.
சேறும், சகதியுமான சாலை
கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் அரசு பள்ளி விளையாட்டு மைதானங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் சாலை தற்போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி பகுதியில் பெய்து வரும் மழையால் இந்த சாலை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயக்குமார், கிருஷ்ணகிரி.
Related Tags :
Next Story