சேலம் மாவட்டத்தில் நடந்த 5 சிறப்பு முகாம்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் தகவல்


சேலம்  மாவட்டத்தில் நடந்த 5 சிறப்பு முகாம்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2021 3:15 AM IST (Updated: 17 Oct 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 5 சிறப்பு முகாம்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 5 சிறப்பு முகாம்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 17 லட்சத்து 75 ஆயிரத்து 418 நபர்களுக்கு முதல் தவணையும், 6 லட்சத்து 50 ஆயிரத்து 513 நபர்களுக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 12-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 5 தடுப்பூசி முகாம்கள் மூலம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 667 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 87 ஆயிரத்து 750 நபர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி என மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 417 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நாளை சிறப்பு முகாம்கள்
இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி செலுத்த தகுதியான நபர்களில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 24 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. போதிய தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாலும், 18 வயதிற்குமேற்பட்ட 10 லட்சத்து 22 ஆயிரத்து 876 நபர்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததாலும் நாளை (திங்கட்கிழமை) 1,392 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கோவிசீல்டு 1 லட்சத்து 76 ஆயிரத்து 80 டோஸ்களும், கோவேக்சின் 14 ஆயிரத்து 360 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. இந்த முகாமில் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த வரும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் எதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story