சேலத்தில் ஒருமணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை-சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி


சேலத்தில் ஒருமணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை-சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 17 Oct 2021 3:26 AM IST (Updated: 17 Oct 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலம்:
சேலம் மாநகரில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சேலம் மாநகரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் சற்று இருந்தது.
அதன்பிறகு மதியம் 12 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சங்கர்நகர். பெரமனூர், 5 ரோடு, சூரமங்கலம், அம்மாபேட்டை, திருச்சி ரோடு, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வாகன ஓட்டிகள் அவதி
குறிப்பாக சங்கர் நகர் குறுக்கு தெருவிலும், திருச்சி மெயின்ரோடு பகுதியிலும் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேசமயம், சாலையோர வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் மழைநீர், சாக்கடை கழிவு நீருடன் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 
சேலத்தில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வெள்ளம்பொல் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. இதனை தொடர்ந்து சேலத்தில் பிற்பகலிலும் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சீதோஷ்ணநிலை காணப்பட்டது. அதேபோல் ஏற்காடு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
தலைவாசல்
தலைவாசல் பகுதியில் பெய்த மழை காரணமாக அங்குள்ள தினசரி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் ஒன்றிய அலுவலகம், பஸ் நிலைய பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றதை காணமுடிந்தது.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:- ஆனைமடுவு-40, ஏற்காடு-35, ஆத்தூர்-15.2, பெத்தநாயக்கன்பாளையம்-7, காடையாம்பட்டி மற்றும் மேட்டூர்-2, சேலம்-1.6, ஓமலூர்-1.

Next Story