உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சி


உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 17 Oct 2021 1:42 PM GMT (Updated: 17 Oct 2021 1:42 PM GMT)

கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

உருளைக்கிழங்கு சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, நெடுகுளா, ஈளாடா, கட்டபெட்டு, உயிலட்டி உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கு அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ள நிலையில், உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகரித்து இருக்கிறது. 

ஆனால் காய்கறி மண்டிகளில் போதுமான கொள்முதல் விலை கிடைக்காததால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.  கடந்த ஆண்டு இதே நேரத்தில் கொரோனா பரவல் இருந்தாலும் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டைக்கு ரூ.2,500 வரை அதிகபட்ச கொள்முதல் விலை கிடைத்தது.

விலை வீழ்ச்சி

ஆனால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையிலும் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டைக்கு ரூ.800 முதல் ரூ.900 வரை மட்டுமே கொள்முதல் விலை கிடைத்து வருகிறது.

இதுகுறித்து உருளைக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-
ஆட்கள் பற்றாக்குறை, இயற்கை பேரிடர் உள்பட பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடன் வாங்கி உருளைக்கிழங்கு சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் மண்டிகளில் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் பல்வேறு செலவினங்களை எவ்வாறு கையாள்வது என்பது தெரியவில்லை. 

முன்கூட்டியே அறுவடை

கடந்த ஒரு வாரமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான உருளைக்கிழங்குகள் தோட்டத்திலேயே அழுகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே லாபம் கிடைக்காவிட்டாலும் முதலீட்டு தொகை கிடைத்தால்போதும் என்று கருதி முன்கூட்டியே உருளைக்கிழங்குகளை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story