வால்பாறையில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை
வால்பாறையில் கனமழை பெய்தது. அப்போது சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கனமழை
வால்பாறையில் பகுதியில் கடந்த 3 நாட்களாக அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கனமழை காரணமாக வெளியே எங்கும் செல்லமுடியாமல் தவித்தனர். சிலர் திரும்ப ஊருக்கு சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
மழையின் காரணமாக வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து அறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் பட்டபகலில் நிலவிய பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சிலர் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
மழையளவு
வால்பாறை பகுதியில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
வால்பாறை-72, சோலையாறு அணை-78, மேல்நீரார்-92, கீழ் நீரார்-60 மழை பெய்தது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு 1008 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Related Tags :
Next Story