நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
பேரூர்
கோவையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தடுப்பணை, குளங்கள் நிரம்பின.
கோவையில் கனமழை
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை தொடர்ந்தது.
அதுபோன்று கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
மேலும் இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் வரக்கூடிய அனைத்து நீரோடைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
இதன்காரணமாக சித்திரைச்சாவடி, பேரூர், புட்டுவிக்கி, சுண்ணாம்பு காளவாய் உள்ளிட்ட தடுப்பணைகள் நிறைந்து வழிகிறது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது.
நிரம்பி வழியும் குளங்கள்
குறிப்பாக செம்மேடு உக்குளம், பேரூர் செட்டிபாளையம், கங்க நாராயண சமுத்திரகுளம், சொட்டையாண்டி குளம், வேடபட்டி புதுக்குளம், கோளராம்பதிகுளம், நரசாம்பதிகுளம் ஆகிய குளங்கள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. அதுபோன்று மற்ற குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும் மேற்கு தொடர்ச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடந்து செல்ல முயற்சிக்கவோ வேண்டாம் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.
மரம் சாய்ந்தது
இந்த மழை காரணமாக கோவை காளப்பட்டி பகுதியில் ஒரு வீடு இடிந்தது. ஆத்துப்பாலம் பகுதியில் சாலையோரத்தில் நின்ற மரம் சாய்ந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினார்கள்.
மேலும் தொடர்மழை காரணமாக கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறு வாணி அணையின் நீர்மட்டம் 43.40 அடியாகவும், பில்லூர் அணை 81.50 அடியாகவும் உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story