‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் குழாயில் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காமராஜர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் தண்ணீர் வீணாக செல்வதால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
ரம்யா, திருச்சி.
கயிற்றில் கட்டப்பட்ட மின்கம்பம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா சிறுகுடி கிராமத்திலுள்ள முஸ்லிம் தெருவில் மின்கம்பம் கீழே சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மின்கம்பத்தை பெரிய வடக்கயிற்றால் கட்டி வைத்து உள்ளனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செண்பக லெட்சுமி, திருச்சி
சாலை அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து மேலவிடுதி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பலகிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயக்குமார், புதுக்கோட்டை.
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
திருச்சி உப்பிலியபுரம் பகுதியிலிருந்து துறையூர் செல்லும் பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி இளைஞர்கள் செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்புலெட்சுமி, திருச்சி.
நாய்கள் தொல்லை அதிகரிப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் ரோட்டில் தாசில்தார் குடியிருப்பு எதிரே தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க முற்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்ல பெண்கள் மற்றும் சிறுவர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாநிதி, ஜெயங்கொண்டம்.
இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை
திருச்சி மன்னார்புரம்- பஞ்சப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், இரவு நேரங்களில் தனியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி சம்பவம் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ரா, திருச்சி.
பராமரிப்பு இன்றி காணப்படும் கழிப்பறை
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகளத்தூர் ஊராட்சி காலனி தெருவில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த கழிப்பறை பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளையராஜா, அரியலூர்.
பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள ராமநாதபுரம் கிராம மக்களின் நலன் கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஓட்டை விழுந்து தண்ணீர் ஒழுகிக் கொண்டே உள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாரை கொண்டு ஓட்டையை அடைத்துள்ளனர். இருப்பினும் அடிக்கடி தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவி, திருச்சி.
Related Tags :
Next Story