ஈரோடு மாநகர் பகுதியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்; மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்


ஈரோடு மாநகர் பகுதியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்; மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2021 1:55 AM IST (Updated: 18 Oct 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் பகுதியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தீவிர ஆய்வு
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு குழுவினர் வீடு வீடாக சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியில் பின்புறம் தேங்கியுள்ள கழிவு நீர் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா?, வீடுகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் நிலத்தடியில் உள்ள குடிநீர் தொட்டி முறையாக மூடப்பட்டுள்ளதா? சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
6 பேருக்கு டெங்கு
அப்போது சுத்தப்படுத்தாமல் கிடக்கும் பகுதிகளை சுத்தப்படுத்தியும், ஏ.டி.எஸ். கொசுப்புழு ஒழிப்பு பணியிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து வாரத்தில் 2 முறை தெளிக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் வில்லரசம்பட்டி, புதுமைக்காலனி உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாரம் புதிதாக 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவா் கூறினார்.

Next Story