போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஈரோடு; ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?


போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஈரோடு; ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 Oct 2021 2:06 AM IST (Updated: 18 Oct 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டு வருகிறது. காளைமாடு சிலை அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டு வருகிறது. காளைமாடு சிலை அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
ஈரோடு மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு கிடக்கின்றன. பல இடங்களில் பணிகள் நிறைவடைந்தாலும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
ஆனால், ஈரோடு காளைமாடு சிலையில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே நுழைவுபாலத்தில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. இங்கு நுழைவுபாலம் மிகவும் குறுகலாக இருக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். இங்கு மாலை நேரங்களில் மாட்டு வண்டிகள், சரக்கு வண்டிகள் அதிகம் செல்லும் சாலையாக இருக்கிறது. மேலும், ரெயில்வே தண்டவாளத்தில் நேரே கீழ் பகுதி சாலை மிகவும் குண்டும் குழியுமாக கிடக்கிறது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் குழி இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள்.
மேம்பாலம்
இந்த காரணங்களால் இங்கு வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. நுழைவு பாலம் பகுதியில் வாகனங்கள் தடுமாறுவது, வேகம் குறைப்பது போன்றவற்றால் இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இங்கு தொடங்கும் நெரிசல் காரணமாக காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா வரை போக்குவரத்து பாதிக்கிறது. தற்போது தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்கள் தொடங்கி விட்டன. திருமண காலமும் தொடங்கி உள்ளது. வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வரும்போது இன்னும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். எனவே போர்க்கால அடிப்படையில் ஈரோடு மாநகர் பகுதியில் சீரமைக்கப்படாமல் உள்ள அனைத்து ரோடுகளையும் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும், ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் நிரந்தரமாக போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இதற்கான நடவடிக்கையை அரசும், அதிகாரிகளும் எடுக்க வேண்டும் என்பதே ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story