ஆம்னி பஸ்-சரக்கு ஆட்டோ மோதல்; தாய்-மகன் உள்பட 4 பேர் சாவு


ஆம்னி பஸ்-சரக்கு ஆட்டோ மோதல்; தாய்-மகன் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 17 Oct 2021 9:53 PM GMT (Updated: 17 Oct 2021 9:53 PM GMT)

துமகூரு அருகே, ஆம்னி பஸ்-சரக்கு ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

துமகூரு:

4 பேர் சாவு

  துமகூரு அருகே கொல்லஹள்ளி கிராமத்தின் வழியாக துமகூரு-சிவமொக்கா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சிவமொக்காவில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு சரக்கு ஆட்டோவும், ஆம்னி பஸ்சும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

  இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. அதுபோல பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் பயணித்து வந்த ஒரு பெண் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் துமகூரு புறநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக துமகூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பூ வியாபாரிகள்

  விசாரணையில் உயிரிழந்தவர்கள் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்த கவிதா(வயது 38), அவரது மகன் தர்ஷன்(22), திவாகர்(25), கிருஷ்ணமூர்த்தி(25) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் பூ வியாபாரம் செய்து வந்ததும், துமகூருவில் உள்ள மார்க்கெட்டில் இருந்து பூக்களை வாங்கி கொண்டு ஆட்டோவில் சொந்த ஊருக்கு சென்றதும், அப்போது விபத்தில் சிக்கி 4 பேர் இறந்ததும் தெரியவந்தது.

  இந்த விபத்து குறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் பஸ் டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் தாய்-மகன் உள்பட 4 பேர் இறந்த சம்பவம் துமகூருவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story