தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - புராதன சின்னங்களை கண்டுகளித்தனர்
தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களை கண்டுகளித்தனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையின் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நேற்று மாமல்லபுரத்தில் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.
பலர் குடும்பம், குடும்பமாக வந்திருந்ததை காண முடிந்தது. பயணிகள் வருகை அதிகம் இருந்த காரணத்தால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பயணிகள் வருகையால் கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.
கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்ட காரணத்தாலும், வெளிநாட்டு விமானங்களுக்கும் அனுமதி இல்லாத காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை காணப்படவில்லை. தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருவதற்கான தடை நீக்கப்பட்டு, மத்திய அரசு சுற்றுலா விசா வழங்கும் பணியை தொடங்கி உள்ளது. இதனால் தற்போது மாமல்லபுரத்தில் படிப்படியாக வெளிநாட்டு பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் டெல்லி மற்றும் சென்னையில் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவில் ராணுவ தலைமை அலுவலகமான பென்டகனில் இருந்து வந்துள்ள கடற்படை வீரர்கள் 40 பேர் நேற்று மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் முக்கிய புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். குறிப்பாக வெண்ணை உருண்டை பாறை அருகில் நின்று கொண்டு அந்த பாறையை தாங்கி பிடிப்பது போன்று புகைப்படம் எடுத்து ரசித்தனர். மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி வரலாற்று தகவல்களை சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி கூறினர். மேலும் சுற்றுலா வழிகாட்டிகளிடம் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றி விவரங்கள் அடங்கிய சுற்றுலாத்துறையின் கையேடுகளை வாங்கி சென்றனர். பல மாதங்களுக்கு பிறகு ஒரே குழுவாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரிசையில் கடற்படை வீரர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story