செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துடியலூர்
செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-2 மாணவி
கோவை ரத்தினபுரி சுப்பம்மாள் நகரை சேர்ந்தவர் சுதாகர். தொழிலாளி. இவருடைய மனைவி சுகந்தி. இவர்களுடைய மகள் ஹரிணி (வயது 16). இவர், தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதற்காக ஹரிணிக்கு, அவருடைய தந்தை சுதாகர் செல்போன் வாங்கி கொடுத்தார். அந்த செல்போனில் ஹரிணி அடிக்கடி கேம் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
தூக்கில் தொங்கினார்
இதை அறிந்த சுதாகர், ஹரிணியை கண்டித்து உள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த அவர் வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஹரிணி, சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்று கதவை பூட்டி உள்ளார்.
காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவருடைய அறையின் கதவு திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பலமுறை தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. இதையடுத்து அவர்கள், ஜன்னல் வழியாக பார்த்த போது ஹரிணி தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
பரிதாப சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று, ஹரிணியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஹரிணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story