சத்தியமங்கலத்தில் விலை வீழ்ச்சியால் 1 டன் சம்பங்கி பூக்களை குப்பையில் கொட்டிய விவசாயிகள்


சத்தியமங்கலத்தில் விலை வீழ்ச்சியால் 1 டன் சம்பங்கி பூக்களை  குப்பையில் கொட்டிய விவசாயிகள்
x
தினத்தந்தி 18 Oct 2021 8:26 PM GMT (Updated: 18 Oct 2021 8:26 PM GMT)

சத்தியமங்கலத்தில் விலை வீழ்ச்சி காரணமாக 1 டன் சம்பங்கி பூக்களை குப்பையில் விவசாயிகள் கொட்டினர்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் விலை வீழ்ச்சி காரணமாக 1 டன் சம்பங்கி பூக்களை குப்பையில் விவசாயிகள் கொட்டினர்.
பூ மார்க்கெட்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களுடைய பூக்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். 
இதேபோல் இந்த மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்காக ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூரு, கொள்ளேகால், பெங்களூரு மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவார்கள். அவ்வாறு வாங்கி செல்லப்படும் பூக்கள் கோவையில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
விலை வீழ்ச்சி
இதனால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும். ஆயுத பூஜை விழாவின் போது பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
ஆனால் ஆயுத பூஜை விழா முடிந்த பின்னர் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக நேற்று சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.10-க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 
குப்பையில் கொட்டப்பட்ட...
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் தாங்கள் மூட்டைகளாக கட்டி சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 1 டன் சம்பங்கி பூக்களை அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் குப்பையோடு குப்பையாக கொட்டிவிட்டு சென்றுவிட்டனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தோட்டத்தில் உள்ள பூக்களை கூலி கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்து பறித்து மூட்டைகளாக்கி சரக்கு வேனில்  கொண்டு வந்தால், அதற்கு உரிய விலை கிடைப்பதில்லை.
 இதனால் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றாலும் எங்களுக்கு எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. எனவே மன வருத்தத்தோடுதான் இந்த பூக்களை குப்பையோடு குப்பையாக கொட்டுகிறோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது,’ என்றனர். 

Next Story