ரப்பர் ஆலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி


ரப்பர் ஆலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 Oct 2021 2:39 AM IST (Updated: 19 Oct 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே ரப்பர் ஆலையில் பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளி பலியானார். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது

பத்மநாபபுரம், 
தக்கலை அருகே ரப்பர் ஆலையில் பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளி பலியானார். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
பாய்லர் வெடித்தது
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை பகுதியில் தனியார் ரப்பர் ஆலை இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் உள்ளனர். 
இந்த ஆலையில் இரவிலும், பகலிலும் ஊழியர்கள் பணிபுரிவது வழக்கம். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம் போல ரப்பர் ஆலை இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு ரப்பர் பாலை சுத்திகரித்து பதப்படுத்தும் பாய்லர் திடீரென வெடித்து சிதறியது.
தொழிலாளி பலி
அப்போது அந்த இடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டது. உடனே, சக ஊழியர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்த போது பீகார் மாநிலத்தை சேர்ந்த பாவிக்மகத்தோ (வயது 29) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியானது தெரிய வந்தது. மேலும் அவருடன் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பர்தீப்ஷானி, சோட்டாஷானி, சுந்தர்மகத்தூத், தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சித்திரங்கோடு பகுதியை சேர்ந்த மரியஜான் ஆகிய 5 பேர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடினர். 
தீவிர சிகிச்சை
இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
ஆலையில் உடல் சிதறி பலியான பாவிக் மகத்தோ உடலை தக்கலை போலீசார் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story