காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 1,300 டன் யூரியா உரம் வந்தது


காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 1,300 டன் யூரியா உரம் வந்தது
x
தினத்தந்தி 19 Oct 2021 2:41 AM IST (Updated: 19 Oct 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 1,300 டன் யூரியா உரம் வந்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரம் பல்வேறு இடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இப்கோ நிறுவனம் மூலமாக 1,300 டன் யூரியா உரம் ரெயிலில் ஈரோட்டுக்கு வந்தது. இந்த உர மூட்டைகளை நேற்று தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணிகளை வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு தொடர்ந்து உரம் அனுப்பப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 600 டன் ‘நானோ யூரியா’ எனும் ‘திரவ வடிவிலான யூரியா உரம்’ பெறப்பட்டு உள்ளது. ஒரு யூரியா மூட்டையில் உள்ள தழைச்சத்து 500 மில்லி நானோ யூரியா திரவத்தில் அடங்கி உள்ளது. எனவே ‘திரவ வடிவில் உள்ள நானோ யூரியா’ உரத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 4 மில்லி என்ற அளவில் கலந்து பயிர் சாகுபடி செய்த 25 நாட்களுக்கு பிறகு இலை வழியாக தெளிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். இந்த உரம் விவசாயிகள் கையாள்வதற்கு மிகவும் எளிதானதாகும். ‘நானோ யூரியா’ திரவத்தை அனைத்து பயிர்களுக்கும் 25 நாட்கள் ஆன நிலையில் தெளிக்கலாம். இந்த ‘நானோ யூரியா’ திரவத்துடன் வேறு எந்த மருந்துடனும் கலந்து தெளிக்கக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது 1,622 டன் யூரியா, 1,790 டன் டி.ஏ.பி. உரம், 2 ஆயிரத்து 37 டன் பொட்டாஷ் உரம், 7 ஆயிரத்து 342 டன் காம்ப்ளக்ஸ் உரம் ஆகியன இருப்பு வைக்கப்பட்டு உள்ளது”, என்றார்.

Next Story