நகைப்பறிப்பு வழக்கில் என்கவுண்ட்டர்: பிடிபட்ட வடமாநில கொள்ளையனுக்கு 9 நாட்கள் போலீஸ் காவல்


நகைப்பறிப்பு வழக்கில் என்கவுண்ட்டர்: பிடிபட்ட வடமாநில கொள்ளையனுக்கு 9 நாட்கள் போலீஸ் காவல்
x

ஸ்ரீபெரும்புதூரில் நகைப்பறிப்பு வழக்கில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து வருகிற 21-ந் தேதி முதல் ஆர்.டி.ஓ. விசாரணை தொடங்குகிறது. பிடிபட்ட வடமாநில கொள்ளையனுக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் கடந்த 9-ந் தேதியன்று இந்திரா (வயது54) என்ற பெண்ணிடம் 2 வடமாநில கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்றனர். உடனே வழிப்பறி கொள்ளையர்கள் கண்இமைக்கும் நேரத்தில் பென்னலூர் ஏரி அருகே காட்டு பகுதியில் தப்பி ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி சத்திய பிரியா, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திக்கு விரைந்து சென்று 10 தனிப்படை அமைத்து துப்பாக்கியுடன் தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை தேடினர். தேடுதல் பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பென்னலூர் ஏரி அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் முர்தர்ஷா போலீசாரை கண்டதும் கத்தியால் தாக்க முயன்றபோது, போலீசார் அவனை என்கவுண்ட்டரில் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

மற்றொரு கொள்ளையன் நயம்அக்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சிறையில் உள்ள கொள்ளையன் நயம்அக்தரை காவலில் எடுத்த விசாரிக்க ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் மனு அளித்தார். நீதிபதி வரும் 26-ந் தேதி வரை 9 நாட்கள் நயம்அக்தரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று முதல் நயம்அக்தரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த என்கவுண்ட்டர் குறித்து விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முத்துமாதவனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் வருகிற 21-ந் தேதி விசாரணையை துவங்க உள்ளார். என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட வடமநில கொள்ளையன் முர்தர்ஷா குறித்து வாக்குமூலம் அளிக்க விரும்புபவர்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என ஆர்.டி.ஓ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story