தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில்  தீப்பெட்டி தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்  மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2021 5:17 PM IST (Updated: 19 Oct 2021 5:17 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது

தூத்துக்குடி;
தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீப்பெட்டி தொழிற்சாலை
தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கல சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு 31.12.21-ந் தேதியுடன் முடிவடையும் தீப்பெட்டி தொழிற்சாலை தொடர்புடைய உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். உரிமதாரர்கள் உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்துடன் கடந்த ஒரு வருடம் மாத வாரியாக தீப்பெட்டி உற்பத்தி, கந்தகம் மற்றும் குளோரேட் வரவு, செலவு விவரப்பட்டியல் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.
உரிமம்
2021ஆம் ஆண்டுக்கான உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அதற்கான உரிம கட்டணத்தை 31-12-21 ஆம் தேதிக்குள் செலுத்தி செலுத்து சீட்டின் அசலை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்துடன் இணைத்து 31.12.21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 1.1.22 ஆம்தேதி முதல் காலதாமதமாக விண்ணப்பிக்கும் உரிமதாரர்கள் உரிம கட்டணத்துடன் தாமத கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். காலதாமத கட்டணத்துடன் மனு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.1.22 ஆகும். அதன்பிறகு வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
கட்டணம்
உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தில் ரூ.2-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். மேலும் உரிமம் 01.01.22 முதல் 31.12.26 வரை புதுப்பித்தலுக்கான கட்டணம் படிவம் 2-க்கு புதுப்பித்தல் கட்டணம் ரூ.5 ஆயிரம், படிவம் 9-க்கு புதுப்பித்தல் கட்டணம் ரூ.10 ஆயிரமும், படிவம் 8-க்கு புதுப்பித்தல் கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்தப்பட வேண்டும். மனு மற்றும் அனைத்து ஆவணங்களிலும உரிமதாரரே கையோப்பமிட்டு இருக்க வேண்டும். பவர் ஏஜெண்ட் கையோப்பமிட்டு இருந்தால், பதிவு செய்யப்பட்ட அசல் பவர் பத்திரம் மற்றும் அதற்கான நகல் தாக்கல் செய்ய வேண்டும். உரிம புத்தகத்துடன் உரிமதாரரின் 2 கலர் புகைப்படங்கள் தாக்கல் செய்ய வேண்டும். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் அனைத்தும் முழுவதும் கையால் செய்யப்படுபவை, பகுதி எந்திரம், முழுவதும் எந்திரம் மூலம் செய்யப்படுபவை என்பதை குறிப்பிட்டு உரிமதாரர் கையோப்பமிட வேண்டும். தொழிற்சாலை உரிமம் 31.12.21 வரை செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். தீத்தடுப்பு சாதனங்கள், தீயணைப்பு உபகரணங்கள் செயல்திறனில் இருக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story