வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீரை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தண்டராம்பட்டு
சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீரை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் மூலம் பாசன வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மாதங்கள் அணை நீர் திறந்துவிடப்படும். இதுதவிர தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள 88 ஏரிகளும் பயனடைந்து வருகின்றன. கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.55 கோடியில் பணி
இந்த நிலையில் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையில் உள்ள 20 மதகுகளில் உள்ள இரும்பு ஷட்டர்களை புதிதாக மாற்றுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்திற்காக ரூ.55 கோடி செலவிடப்படுகிறது. இந்த பணிகள் இன்னும் ஓராண்டு காலம் நடைபெறும் என்று தெரிய வருகிறது.
எனவே அணையில் 99 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பரவலாக மழை பெய்து வருவதாலும் கிருஷ்ணகிரி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1,343 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
என்வே அணையின் நீர்மட்டமும் 97.45 அடியாக உயர்ந்துள்ளது. இதற்குமேல் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உபரி நீரை இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அணை நீர் வெளியேற்றம்
அதன்படி இன்று காலை 10.30 மணி அளவில் இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் சாத்தனூர் அணைக்கு வரும் வினாடிக்கு 1,343 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. நிகழ்ச்சியில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாத்தனூர் அணை நீரை திறந்து விட்டார்.
நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மு.பன்னீர்செல்வம், மத்திய ஒன்றிய செயலாளர் கோ.ரமேஷ், தாசில்தார் பரிமளா, தண்டராம்பட்டு ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மின்சாரம் உற்பத்தி
இன்று முதல் சாத்தனூர் அணையில் உபரிநீர் வெளியேற்றப்படுவதை பயன்படுத்தி அணையில் உள்ள நீர் மின் நிலையம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 6 மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story