பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் பலத்த மழை


பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் பலத்த மழை
x
தினத்தந்தி 19 Oct 2021 8:17 PM IST (Updated: 19 Oct 2021 8:17 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் பலத்த மழை

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆனைமலையில் வீடு இடிந்து விழுந்து முதியவர் படுகாயமடைந்தார். 

பலத்த மழை

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்துவதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய-விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. 

முதியவர் படுகாயம்

ஆனைமலை அருகே உள்ள திவான்சாபுதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). கூலி தொழிலாளி. இதற்கிடையில் வீட்டிற்கு அவரது மகள் சுகன்யா (30), பேத்தி யாழினி, பேரன் யாகேஷ் ஆகியோர் வந்திருந்தனர். இந்த நிலையில் அந்தப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுப்பிரமணி வீட்டில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து சுகன்யா தனது குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி விட்டார். அப்போது சமையல் அறை பகுதியில் நின்ற சுப்பிரமணியத்தால் வெளியே வர முடியவில்லை. அதற்குள் வீடு முழுவதும் இடிந்து விழுந்தது.
இதில் அவருக்கு தலை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகளை தூக்கி கொண்டு சுகன்யா வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் 3 பேரும் உயிர் தப்பினர்.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஓடோடி வந்து படுகாயம் அடைந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள்

மழையின் காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி சோலையார் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 698 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாகவும், சுரங்கபாதை வழியாக தூணக்கடவு அணைக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கேரள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 71.74 அடியாக உள்ளது.
இதேபோன்று ஆழியாறு அணைக்கு அப்பர் ஆழியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் மூலம் வினாடிக்கு 768 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மதகு மற்றும் பாசனம், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 930 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணைகள் நிரம்பிய நிலையில் உள்ளதால் தொடர்ந்து நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

மழை அளவு

நேற்று காலை 8 மணி நிலவரப்படி பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சோலையார் 13, பரம்பிக்குளம் 20., ஆழியாறு 4, வால்பாறை 12, மேல்நீராறு 22, கீழ்நீராறு 27, காடம்பாறை 5, சர்க்கார்பதி 6 , வேட்டைக்காரன்புதூர் 28, மணக்கடவு 4, தூணக்கடவு 6, பெருவாரிபள்ளம் 12, அப்பர் ஆழியாறு 1, நவமலை 2.

Next Story