பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்
பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்
பொள்ளாச்சி
கேரளாவில் மழையின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமானது.
மாட்டு சந்தை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை என்பதால் மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு கோவை மட்டுமல்லாது வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்ததால் கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகமானது. இதற்கிடையில் தொடர் மழையின் காரணமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதன் காரணமாக வரத்து அதிகரித்தும் விற்பனை மந்தமானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
விற்பனை மந்தம்
பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த வாரத்தை விட சற்று மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதற்கிடையில் கேரளாவில் பலத்த மழையின் காரணமாக பாலங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளா வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாடுகள் விற்பனை மந்தமானது.
நாட்டு காளை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், பசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், மொரா ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், செர்சி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story