சிக்பள்ளாப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
சிக்பள்ளாப்பூர் அருகே, ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
சிக்பள்ளாப்பூர்:
3 சிறுவா்கள் சாவு
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கோடதவடி கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சுதன் (வயது 15), சுதர்சன் (15), சதீஷ் (15). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் சுதன், சுதர்சன், சதீஷ் ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளில் பெற்றோர் வளர்த்து வரும் ஆடுகளை கிராமத்தில் உள்ள ஏரியில் குளிப்பாட்ட அழைத்து சென்றனர்.
3 பேரும் ஏரியின் கரையில் நின்று கொண்டு ஆடுகளை குளிப்பாட்டி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியில் தவறி விழுந்தனர். 3 பேரும் நீச்சல் தெரியாது என்பதால் ஏரியில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக ஏரியில் மூழ்கி இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிந்தாமணி புறநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
சோகம்
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சுதன், சதீசின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுதர்சனின் உடல் கிடைக்கவில்லை. அவனது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிந்தாமணி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் இறந்த சம்பவம் கோடதவடி கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story