பா.ஜனதாவில் நான் ஓரங்கட்டப்பட்டு விட்டேனா? - எடியூரப்பா பதில்


பா.ஜனதாவில் நான் ஓரங்கட்டப்பட்டு விட்டேனா? - எடியூரப்பா பதில்
x
தினத்தந்தி 19 Oct 2021 8:19 PM GMT (Updated: 19 Oct 2021 8:19 PM GMT)

பா.ஜனதாவில் நான் ஓரங்கட்டுப்பட்டு விட்டேனா? என்ற கேள்விக்கு எடியூரப்பா பதிலளித்துள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

யாரும் ஓரங்கட்டவில்லை

  கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் நான் நாளை (புதன்கிழமை) முதல் 4 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளேன். தேவைப்பட்டால் மேலும் ஒரு நாள் பிரசாரம் செய்வேன். பிரதமர் மோடியின் திட்டங்கள், பா.ஜனதா அரசின் திட்டங்களை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பாக்கியலட்சுமி திட்டத்தை செயல்படுத்தினேன். பா.ஜனதாவில் என்னை யாரும் ஓரங்கட்டவில்லை.

  நானே சுய விருப்பத்தின்பேரில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். அதனால் யாரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை அமைப்போம். பிரதமர் மோடியின் தலைமையை உலகமே அங்கீகரித்துள்ளது. என்னை பற்றி சித்தராமையா தரக்குறைவாக பேசுகிறார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அவர் இவ்வாறு பேசுவது சரியல்ல.

பாகுபாடு பார்க்கவில்லை

  சிறுபின்மை மக்களுக்கு நாங்கள் எந்த அநீதியும் ஏற்படுத்தவில்லை. பா.ஜனதா பாகுபாடு பார்க்கவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனால் சிறுபான்மையினரும் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.
  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

  எடியூரப்பாவிடம் நிருபர்கள், அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் பசவராஜ் பொம்மை மீண்டும் முதல்-மந்திரியாக நியமிக்கப்படுவாரா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Next Story