பெருந்துறை அருகே நள்ளிரவில் துணிகரம் எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு; மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு


பெருந்துறை அருகே நள்ளிரவில் துணிகரம் எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு; மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 9:30 PM GMT (Updated: 19 Oct 2021 9:30 PM GMT)

பெருந்துறை அருகே எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மர்ம நபர் மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெருந்துறை
பெருந்துறை அருகே எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மர்ம நபர் மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
எண்ணெய் கடை
பெருந்துறை-விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சரளையில் உணவு விடுதி, மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஆட்டோ பழுது நீக்கும் கடைகள் மற்றும் சமையல் எண்ணெயை ஆட்டி, விற்பனை செய்யும் கடைகள் என ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன.
நேற்று காலை சரளையில் உரிமையாளர்கள், கடைகளை திறப்பதற்காக வந்தனர். அப்போது செல்வக்குமார் (வயது 49) என்பவரின் சமையல் எண்ணெய் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
ரூ.30 ஆயிரம் காணவில்லை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது    அங்கிருந்த மேஜையும்        திறக்கப்பட்டு  கிடந்தது. அதை பார்த்தபோது அதிலிருந்த ரூ.30 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபோல் அவரது கடை அருகே உள்ள வெங்கடாச்சலம் (55) என்பவரின் பல்பொருள் அங்காடி, சக்திவேல் (28) என்பவரின் ஆட்டோ சர்வீஸ் சென்டரின் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. ஆனால் அங்கு எதுவும் கொள்ளை போகவில்லை.
மர்மநபர்
இதுகுறித்து 3 ேபரும் பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் வெங்கடாச்சலம் கடையில் பொருத்தப்பட்டு் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்வையிட்டனர்.
அதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.20 மணி அளவில், முககவசம் அணிந்த மர்மநபர் ஒருவர் பல்பொருள் அங்காடி முன்பு வந்து நிற்பதும், பின்னர் அந்த நபர் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என அக்கம்பக்கத்தில் நோட்டமிடுவதும், யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்ததும் தான் கொண்டு வந்த இரும்பு கம்பியால் பல்பொருள் அங்காடியில்  உள்ள 2 ஷட்டர்களின் பூட்டைகளை உடைத்து உள்ளே புகுவதும் பதிவாகியிருந்தது.
வலைவீச்சு
ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அந்த நபர் வெளிேய வந்து அருகே உள்ள செல்வக்குமாரின் எண்ணெய் கடை கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த மேஜையை திறந்து அதிலிருந்த ரூ.30 ஆயிரத்தை திருடியுள்ளார். அதேபோல் சக்திவேல் கடை கதவின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் சிக்காததால் ரூ.30 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் ஆகியோர் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் உருவத்தை வைத்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சரளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story