ஈரோட்டில் ஓவிய பூங்காவாக மாறிய பள்ளிக்கூடம்
ஈரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் ஓவிய பூங்காவாக மாறி உள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் ஓவிய பூங்காவாக மாறி உள்ளது.
நேரடி வகுப்புகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் அதற்கு முன்பாகவே 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து தற்போது 9-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
மதரசா பள்ளிக்கூடம்
அதன் காரணமாக தற்போது பள்ளிக்கூடங்களில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வகுப்பறை, மேஜை, சேர், மின் விளக்குகள், காற்றாடி, கரும்பலகை, அறிவிப்பு பலகை, குடிநீர் தொட்டிகள், கழிப்பறை என அனைத்தும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன் உதாரணமாக ஈரோடு செல்லபாட்சா வீதியில் உள்ள ஈ.கே.எம்.அப்துல் கனி மதரசா இஸ்லாமிய தொடக்க பள்ளிக்கூடம் வண்ணமயமாக தயாராகி உள்ளது. அரசு உதவி பெறும் இந்த தொடக்க பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 800 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தத்ரூபமாக...
கொரோனா காலக்கட்டங்களில் பூட்டி கிடந்த இந்த பள்ளிக்கூடத்தை ஆசிரியர் குழுவினர் இணைந்து, பாடவாரியாக உள்ள பள்ளிக்கூட வகுப்பு சுவர்கள், பொதுச்சுவர், படிக்கட்டு, கைப்பிடி, தண்ணீர் தொட்டி என அனைத்து இடங்களிலும் படக்காட்சிகளை தத்ரூபமாக வரைந்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூசா ராஜா ஜூனைதி, ஆசிரியை காயத்ரி அன்னபூரணி ஆகியோர் கூறியதாவது:-
பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால் மாணவ -மாணவிகள் பல மாதங்களாக மன இறுக்கத்துடனும், சக நண்பர்கள், ஆசிரியர்கள், பாடப்புத்தகம், எழுதுதல் போன்றவற்றை இழந்த நிலையில் உள்ளனர். வருகிற 1-ந்தேதி அவர்களை வரவேற்க நாங்களும், எங்கள் பள்ளியும் தயாராக உள்ளோம்.
சுவர்களே புத்தகம்
குறிப்பாக தமிழ், ஆங்கில எழுத்துக்கள், விலங்குகள், பழங்கள், மலர்கள், மாதங்கள், உணவு பொருட்கள், கலாசார நிகழ்வு, நாடுகளின் வரைபடம், கணித சமன்பாடு, உடல் பாகங்கள் என சுவர் ஓவியங்கள் மூலமே கற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளோம். சுவர்களே புத்தகங்களாக மாற்றி வைத்துள்ளோம்.
மேலும் போக்குவரத்து விதிகள், நாடுகளின் நாணயங்கள், தேசிய சின்னங்கள், தலைவர்களின் உருவப்படம், இயல், இசை, நாடக காட்சிகள், பொது அறிவு, கார்ட்டூன் சித்தரங்களை வரைந்து வைத்துள்ளோம்.
ஓவியங்கள்
இந்த வண்ண ஓவியங்கள், அவர்களின் மனநிலையை வண்ண மயமாக ஈர்க்க வேண்டும் என திட்டமிட்டு வரைந்துள்ளோம். இது மாணவர்களுக்கு படிக்கும், பார்க்கும் ஆர்வத்தை தூண்டும். பள்ளிக்கூடத்தில் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளதை கேள்விப்பட்டு பல குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வந்து பார்த்து சென்றுவிட்டனர்.
தற்போது தினமும் ஏராளமான குழந்தைகள் வந்து, வண்ண மிகு வகுப்பறைகளை பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்த சூழல் அவர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என வரைந்து, குழந்தைகளை வரவேற்க தயாராகி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story