மீஞ்சூர் ஒன்றியத்தில் யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்பு


மீஞ்சூர் ஒன்றியத்தில் யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2021 10:10 AM IST (Updated: 20 Oct 2021 10:10 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் ஒன்றியத்தில் யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

பொன்னேரி,

மீஞ்சூர் ஒன்றியத்தில் காட்டூர், தேவதானம், அனுப்பம்பட்டு, வெள்ளோடை, கொடூர், தேவம்பட்டு, கோளுர், திருப்பாலைவனம், காட்டாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் பயிர் நடவு பணிகள் ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. நெற்பயிர்கள் நடவு நட்ட 20 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் நெற்பயிர்கள் வளர்ச்சி அடையும் நிலையில் தூர்கட்டி வரும். இந்த நிலையில் நெற்பயிர்கள் வளர்ச்சிக்காக விவசாயிகள் யூரியாவை நடவு வயலில் இட்டு வளர்ச்சிக்காக உதவுவர்.

நல்ல ஆரோக்கியமாக நெற்பயிர்கள் வளர்ந்தால் வடகிழக்கு பருவ மழையின் போது நெற்பயிர்கள் நீரில் மூழ்காமல் காக்கப்படும். இதனால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. நெற்பயிர்கள் காலதாமதமாக வளருவதால் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்படுவதுடன் ஒரே நேரத்தில் புகையான் என்ற பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்படும். இதனை தவிர்க்க விவசாயிகள் சம்பா பருவத்தை சரியாக பயன்படுத்தி புரட்டாசி மாதத்தில் நடவு பணியினை முடித்து விடுவார்கள். இந்த மாத கடைசியில் நடவு செய்த பயிர்கள் 20-ம் நாளில் இருந்து யூரியாவை பயன்படுத்த தொடங்குவர்.

மீஞ்சூர் ஒன்றியத்தில் தமிழக அரசின் கூட்டுறவு விவசாய கடன் சங்கத்தின் மூலம் கிடைக்கப்பெறும் யூரியாவை பயன்படுத்துவர். தற்போது விவசாய கூட்டுறவு சங்கங்களில் யூரியாவின் கையிருப்பு போதிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது.

இது குறித்து திவள்ளூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சம்பத் கூறும்போது:-

திருவள்ளூர் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் டன் யூரியா தேவை. 1000 டன் யூரியா வந்துள்ளது. யூரியா தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story