தொழில்அதிபரிடம் ரூ.22¾ லட்சம் மோசடி
தொழில்அதிபரிடம் ரூ.22¾ லட்சம் மோசடி
கோவை
கோவை ஒண்டிபுதூர் அருகே உள்ள விவேகானந்தா நகரை சேர்ந்தவர் தமிழரசு (வயது 54). லாரி ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு சந்தோஷ் என்பவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இதில், அவர் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் ரூ.1 கோடி கடன் வரை ஆன்லைன் மூலம் கடனுதவி பெற்று தருவதாக தெரிவித்து உள்ளார்.
ஆரம்பத்தில் தனக்கு கடனுதவி தேவையில்லை என்று தமிழரசு, அவரிடம் தெரிவித்து உள்ளார்.
ஆனால் சந்தோஷ் தொடர்ந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக தமிழரசிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய தமிழரசு, அவரிடம் கூடுதல் தகவல் கேட்டு உள்ளார். அப்போது சந்தோஷ் ரூ.1 கோடி வரை குறைந்த வட்டியில் தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனுதவி பெற்றுத்தர செயலாக்க கட்டணமாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய தமிழரசு கடந்த ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக, சந்தோசிஷ் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.22 லட்சத்து 81 ஆயிரம் தொகை செலுத்தி உள்ளார்.
ஆனால் பணம் செலுத்தி பல மாதங்கள் கடந்த நிலையில், அவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனுதவி எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழரசு, சந்தோசை தொடர்பு கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தமிழரசு கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் கூறும்போது, ஆன்லைன் மூலம் கடனுதவி மற்றும் வங்கி விபரங்கள் குறித்து யாராவது கேட்டால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு நேரில் சென்று விசாரணை செய்த பின்னரே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story