கோவில் உள்பட 32 வீடுகள் இடித்து அகற்றம்


கோவில் உள்பட 32 வீடுகள் இடித்து அகற்றம்
x
கோவில் உள்பட 32 வீடுகள் இடித்து அகற்றம்
தினத்தந்தி 20 Oct 2021 7:05 PM IST (Updated: 20 Oct 2021 7:05 PM IST)
t-max-icont-min-icon

கோவில் உள்பட 32 வீடுகள் இடித்து அகற்றம்

கோவை, அக்.21-

கோவை -திருச்சி ரோட்டில் ரெயின்போ குடியிருப்பு முதல் பங்குவர்த்தக கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது இந்த மேம்பாலத்தின் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டன. சிங்காநல்லூரில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி உக்கடம் செல்லும் சாலையில் இறங்குவதற்கு வசதியாக இறங்குதளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த இறங்கு தளத்திற்காக 9 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இறங்கு தளம் அமைய உள்ள இடத்தில் கோவில் மற்றும் சில வீடுகள் உள்ளன. ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள இந்த வீடுகளை இடித்து அகற்ற தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதனிடையே ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களுக்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் குடிசை மாற்றுவாரியம் சார்பில் கட்டப்பட்டு உள்ள வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றும் பணி தொடங்கியது. வீடுகளில் குடியிருந்தவர்கள் தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டனர். பின்னர் அந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த முத்துமாரியம்மன் கோவிலில் இருந்த அம்மன் சிலை அகற்றப்பட்டது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் மற்றும்வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி முரளி கூறியதாவது:-

கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் இருந்து சுங்கம் அருகே உக்கடம் பைபாஸ் சாலையில் இறங்குளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் காரணமாக 130 மீட்டர் தூரத்திற்கு இறங்குதளம் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு மாற்றுவீடு வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று (நேற்று) முதற்கட்டமாக 32 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. 

இதுதவிர மேலும் 20 வீடுகள் இடித்து அகற்றப்பட உள்ளது. இவர்களுக்கான வீடுகள் ஒதுக்கப்பட்டதும், அனைத்து வீடுகளும் இடிக்கப்படும். உக்கடம் பைபாஸ் சாலையில் இறங்குதளம் அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story