அ.தி.மு.க. கல்வெட்டு உடைப்பு
ஈரோட்டில் அ.தி.மு.க. கல்வெட்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கட்சியினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
ஈரோட்டில் அ.தி.மு.க. கல்வெட்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கட்சியினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கல்வெட்டு உடைப்பு
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி நால்ரோடு பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.4½ லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஜெயலலிதா மற்றும் அப்போதைய எம்.பி.யான செல்வகுமார சின்னையன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த கல்வெட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் தங்கமுத்து, கோவிந்தராஜன் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்மநபர்கள்
இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், “அதிகாலையில் கல்வெட்டு உடைக்கப்பட்டு உள்ளது. லாரி போன்ற ஏதாவது ஒரு வாகனம் மோதி கல்வெட்டு சேதமாகி இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் கல்வெட்டு உள்ள பகுதியில் சாலை விசாலமாக உள்ளது. எனவே வாகனம் மோத வாய்ப்பில்லை. யாரோ கல்வெட்டை உடைத்து இருக்கிறார்கள். கல்வெட்டு உடைத்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.
கல்வெட்டு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள வீடியோவை கண்காணித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் அ.தி.மு.க. கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story