மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வௌிவந்து தலைமறைவானவருக்கு ஆயுள் தண்டனை


மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வௌிவந்து தலைமறைவானவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 20 Oct 2021 3:33 PM GMT (Updated: 20 Oct 2021 3:33 PM GMT)

மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தபோது தலைமறைவானவருக்கு ஈரோடு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தபோது தலைமறைவானவருக்கு ஈரோடு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
மூதாட்டி கொலை
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ராயபாளையம் புதூர் கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 60). இவர், கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி அதே பகுதியில் உள்ள தனது மருமகனின் ஜவுளி நிறுவனத்தில் படுத்து தூங்கினார்.
அப்போது நிறுவனத்தில் திருடுவதற்காக சுற்றுச்சுவரை ஏறி 3 பேர் உள்ளே குதித்துள்ளனர். அவர்களை பார்த்த பெரியம்மாள் சத்தம் போட்டுள்ளார். இதனால் இரும்பு கம்பி வைத்திருந்த ஒருவன் பெரியம்மாளை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பிச்சென்றனர்.
3 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டியை கொலை செய்தது, திருவாரூர் மாவட்டம் குடைவாசல் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஆதி என்கிற அருண்குமார் (47), சித்தோடு பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி (48), கணபதி (43) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் மூதாட்டியை கொலை செய்வதற்கு முன்பாக, கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டில் வி.சி.டி. பிளேயரை திருடி விட்டு அங்கிருந்து ஜவுளி நிறுவனத்துக்கு திருட வந்தபோது மூதாட்டி சத்தம் போட்டதால் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கொள்ளை அடித்தல், கொலை செய்தல், வீடு புகுந்து திருடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அருண்குமார், சூரியமூர்த்தி, கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
13 ஆண்டுகள் தலைமறைவு
மேலும் இதுதொடர்பான வழக்கு ஈரோடு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி கடந்த 2007-ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். அப்போது சூரிய மூர்த்திக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கணபதி அரசு சாட்சியாக மாறியதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் ஜாமீனில் வெளியில் வந்த அருண்குமார் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தலைமறைவானதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து 13 ஆண்டுகள் கழித்து கடந்த 2018-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் தண்டனை
இந்த நிலையில் மூதாட்டி கொலை வழக்கின் இறுதி விசாரணை ஈரோடு மாவட்ட 2-ம் கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி கே.ஆர்.ஜோதி நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் பெரியம்மாளை கொலை செய்த குற்றத்திற்காக அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில், கொள்ளை அடித்த குற்றத்திற்காக அருண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், வி.சி.டி. பிளேயரை திருடியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கக்கோரியும் உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஏ.சண்முகசுந்தரம் ஆஜரானார்.

Next Story