கொப்பரை தேங்காய் விலை குறைந்தது


கொப்பரை தேங்காய் விலை குறைந்தது
x
தினத்தந்தி 20 Oct 2021 10:56 PM IST (Updated: 20 Oct 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கொப்பரை தேங்காய் விலை குறைந்தது

பொள்ளாச்சி

கேரளாவில் மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் எண்ணெய் மார்க்கெட் சரிந்து உள்ளது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை குறைந்து உள்ளது.

கொப்பரை தேங்காய் ஏலம் 

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில்  மிலாது நபியை யொட்டி விடுமுறை விடப்பட்டதால்  கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. 

ஏலத்தை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கி நடத்தினார். பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து  கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். 

தரம் பிரித்து கொப்பரை தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் விலை அதிகரிக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

497 மூட்டைகள் 

68 விவசாயிகள் 497 மூட்டை கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். 272 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.93.60 முதல் ரூ.98.15 வரையும், 225 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.75.30 முதல் ரூ.88.10 வரையும் ஏலம் போனது. 

தொடர் விடுமுறை காரணமாக 10 நாட்களுக்கு பிறகு ஏலம் நடைபெற்றதால் கடந்த வாரத்தை விட 326 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது. 

விலை குறைவு 

கேரளாவில் தொடர் மழையின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இதன் காரணமாக இங்கிருந்து கேரளாவுக்கு எண்ணெய் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எண்ணெய் மார்க்கெட் சரிவு காரணமாக கொப்பரை தேங்காய் விலையும் உயரவில்லை.  

வழக்கமாக அக்டோபர் மாதம் வரத்து குறைந்து கொப்பரை தேங்காய் விலை அதிகரித்து காணப்படும். ஏற்கனவே கொரோனா காரணமாக சரிந்து இருந்த எண்ணெய் மார்க்கெட்டில் விலை சற்று உயர்ந்து வந்தது. 

இதற்கிடையில் தற்போது மழையின் காரணமாக மீண்டும் விலை குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story