கோவில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
கரூர்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு அன்ன பருக்கையிலும் சிவரூபம் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்க கூடாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீக தன்மையை எடுத்து காட்டவும் ஒவ்வொரு ஆண்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர், மற்றும் அங்குள்ள நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டு சென்றனர்.
கோடீஸ்வரர் கோவில்
இதேபோல ஐந்து ரோடு அருகே அமைந்துள்ள கோடீஸ்வரர் கோவில் மற்றும் படிகட்டுதுறையில் அமைந்துள்ள வஞ்சுலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
லாலாபேட்டை- கிருஷ்ணராயபுரம்
லாலாபேட்டையில் உள்ள புகழ்பெற்ற செம்போர் ஜோதி ஈஸ்வரர் கோவிலில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள் படையலிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக திருக்கண்மாலீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. அதன் பிறகு அரிசி சாதம் வடித்து அன்னாபிஷேகம் படைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல சின்னசேங்கல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் மணவாசி மத்திய புரீஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
வெள்ளியணை-தோகைமலை
வெள்ளியணை அருகே உள்ள மூக்கணாங்குறிச்சி கிராமம் நத்தமேட்டில் உள்ள வீரபாண்டி ஈஸ்வரர் உடனுறை வைராக்கிய நாயகி அம்மனுக்கு நேற்று புனித நீர், இளநீர், பால், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வீரபாண்டி ஈஸ்வருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து மலர் மாலைகள் சூடி தீபாராதனை காட்டப்பட்டது.
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தோகைமலை அருகிலுள்ள ஆர்.டி.மலை மலை மீது அமைந்திருக்கும் விராசிலை ஈஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை கோவில் அர்ச்சகர் கந்தசுப்பிரமணியன், வேதரத்தினம் சிவம் குழுவினர் நடத்தினர். முன்னதாக 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், கழுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தோகைமலை மலை மீது அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சிவாயம் சிவபுரீஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், சின்னரெட்டிபட்டி ஆவ்டைலிங்கேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
குளித்தலை-நொய்யல்
குளித்தலையில் பிரசித்திபெற்ற கோவிலான கடம்பவனேசுவரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதுபோல குளித்தலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 50 கிலோ எடையுள்ள அரிசின் மூலம் சாதம் தயாரிக்கப்பட்டு மாதேஸ்வரருக்கு சாத்தப்பட்டது. பின்னர் காய்கறி மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சுவாமி மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல, குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில், புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், நஞ்சை புகளூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவில் உள்பட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
Related Tags :
Next Story