பரம்பிக்குளம் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
பரம்பிக்குளம் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
பொள்ளாச்சி
கனமழை காரணமாக பரம்பிக்குளம் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக 147 மி.மீ. மழை பதிவானது.
பரம்பிக்குளம் அணை
பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதிக்குள் பரம்பிக்குளம் அணை உள்ளது. அணை பராமரிப்பு, நீர்வரத்து கணக்கீடு, தண்ணீர் திறப்பு ஆகிய பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி செய்கின்றன மற்றும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.
கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய தென் மேற்கு பருவமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. இதன் காரணமாக கடந்த மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் மதகுகள் வழியாகவும் திறந்து விடப்பட்டது.
அதிகபட்ச மழை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு பரம்பிக்குளம் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதையத்து அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கேரள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பதும் குறைக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிகாரிகள் இரவு, பகலாக நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக பரம்பிக்குளத்தில் 147 மில்லி மீட்டர் மழை பதிவானதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story