ஈரோடு மாவட்டத்தில் 2022-2023-ம் நிதி ஆண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.15 ஆயிரத்து 259 கோடி கடன் வழங்க இலக்கு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 2022-2023-ம் நிதி ஆண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.15 ஆயிரத்து 259 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2022-2023-ம் நிதி ஆண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.15 ஆயிரத்து 259 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
கடன் திட்ட அறிக்கை
ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், நபார்டு வங்கி சார்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது:-
முன்னோடி வங்கியானது ஆர்.பி.ஐ-ன் மாற்றி அமைக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை தயாரித்து வெளியிடுகிறது. வங்கி மூலம் கொடுக்கும் கடன் உதவியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மாற்றத்திற்கு முதுகெலும்பாக உள்ளது.
வளம் சார்ந்த இந்த திட்ட அறிக்கையை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுடனும், பல்வேறு தொழில் துறைகளுடனும் கலந்து ஆலோசிக்கப்படுகிறது. பின்னர் கடந்த ஆண்டு வங்கிகள் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் அளவு மற்றும் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு துறைகளுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள உள்கட்டமைப்பு வசதி, மேலும் தேவைப்படும் வசதி போன்றவற்றை கணக்கில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கை தயார் செய்து, வங்கிகளுக்கு கடன் இலக்கு ஒதுக்கப்படுகிறது.
ரூ.15,259 கோடி
ஈரோடு மாவட்டத்தில் 2022-2023-ம் நிதி ஆண்டிற்கு ரூ.15 ஆயிரத்து 259 கோடியே 60 லட்சம் கடன் வழங்க வாய்ப்பு உள்ளதாக நபார்டு வங்கி திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இலக்கான ரூ.13 ஆயிரத்து 750 கோடியை விட 10.9 சதவீதம் அதிகமாகும். மேலும் வரும் நிதி ஆண்டிற்கான நபார்டு வங்கியின் முன்னுரிமை கடன் திட்ட அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு கிளை அளவில் கடன் வணிக வளர்ச்சியை திட்டமிட இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் சிறு, குறு தொழில் துறைகள், தோட்டக்கலை பயிர்களுக்கு மத்தியகால விவசாய கடன்கள், பண்ணை எந்திர மயமாக்கல், நீர் மேலாண்மை மற்றும் சேமிப்பு சாதனங்கள், கால்நடை வளர்ப்பு குறிப்பாக பர்கூர் மலைப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெரியபால் குளிரூட்டும் நிலையங்களை அமைத்தல் போன்றவற்றுக்கு அதிகளவில் கடன் வழங்க வங்கியாளர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி கடன்
ஈரோடு மாவட்டம் விவசாயத்தில் முன்னோடி மாவட்டமாக விளங்குவதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, மொத்த தொகையில் விவசாயத்திற்கு மட்டும் ரூ.8 ஆயிரத்து 113 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.4 ஆயிரத்து 449 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. விவசாய உள்கட்டமைப்பிற்கு ரூ.606 கோடியே 78 லட்சமும், ஏற்றுமதி கடனாக ரூ.307 கோடியே 50 லட்சமும், கல்வி கடனாக ரூ.438 கோடியே 37 லட்சமும், வீட்டு வசதி கடனாக ரூ.976 கோடியே 87 லட்சமும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக ரூ.64 கோடியும், மகளிர் சுய உதவிக்குழு கடனாக ரூ.847 கோடியே 87 லட்சமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்ட அறிக்கையை பயன்படுத்தி அனைத்து துறைகளும் வளர்ச்சியை எட்ட வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தற்போது உள்ள இளைஞர்கள் அதிக ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கடன் உதவி வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அசோக், மகளிர் திட்ட இயக்குனர் கெட்ஸி லீமாஅமாலின் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story