குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்- போலீஸ் குவிப்பு-பரபரப்பு


குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்- போலீஸ் குவிப்பு-பரபரப்பு
x
தினத்தந்தி 21 Oct 2021 9:59 PM GMT (Updated: 21 Oct 2021 9:59 PM GMT)

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி.என்.பாளையம்
குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குழாய் பதிக்க எதிர்ப்பு
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் அருகே  குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இதன் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு அவர் ஆழ்குழாய் கிணறு அமைத்து அங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் வைபன்காடு என்ற இடத்தில் உள்ள 5 பேரின் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கும் பணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்.
இதில் ஏற்கனவே 4½ கிேலா மீட்டர் தூரம் குழாய் அமைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 1½ கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்க வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூரை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீண்டும் பணி தொடக்கம்
விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என கூறியதால் குழாய் பதிக்கும் பணிக்கான உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 6 பேரும் கோர்ட்டு உத்தரவை பெற்று நேற்று காலை மீண்டும் குழாய் பதிக்கும் பணியை தொடங்கினார்கள். மேலும் கிராம மக்கள் பணிக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, கோர்ட்டு உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
சாலை மறியல்
இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் நேற்று காலை வினோபாநகர்-கொங்கர்பாளையம் ரோட்டில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வினோபா நகரில் இருந்து கோபிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர்.
இதுபற்றி அறிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, கோபி தாசில்தார் தியாகராஜ் மற்றும் வருவாய் துறையினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம் கூறும்போது, ‘கோர்ட்டை நாடி இன்னும் 15 நாட்களுக்குள் பணியை நிறுத்துவதற்கான உத்தரவை பெற்று வாருங்கள். அவ்வாறு இல்லையென்றால் மீண்டும் பணி தொடங்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் பஸ்சை விடுவித்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Next Story