சென்டிரல் முதல் மூலக்கொத்தளம் வரை வால்டாக்ஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சென்டிரல் முதல் மூலக்கொத்தளம் வரை வால்டாக்ஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 Oct 2021 3:42 AM IST (Updated: 22 Oct 2021 3:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் முதல் மூலக்கொத்தளம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வால்டாக்ஸ் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் அகற்றினர்.

வால்டாக்ஸ் சாலை

சென்னை சென்டிரல் முதல் மூலக்கொத்தளம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வால்டாக்ஸ் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் சாலையோரம் வசிப்பவர்கள் நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் கடைகளுக்கு முன்பு அலங்கார வளைவு, மேஜை, பெயர் பலகை உள்ளிட்டவைகளை வைத்தும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனால் பாதசாரிகள் நடைபாதையில் செல்ல முடியாமல் சாலையில் நடக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் சில நேரங்களில் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் வால்டாக்‌ஸ் சாலையில் இருந்து தமிழகத்தின் பிற மாநிலங்களுக்கு, மருந்து, விவசாயம் மற்றும் உணவு சார்ந்த அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு பொருட்களை லாரி மூலம் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் இந்த சாலையில் உள்ளதால், பார்சல்களை சாலையோரமே வைத்து லாரியில் ஏற்றி இறக்குகின்றனர். இதனாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன் உத்தரவின்பேரில் நேற்று காலை செயற்பொறியாளர் லாரன்ஸ், உதவி செயற்பொறியாளர்கள் நக்கீரன், பழனி, உதவி பொறியாளர்கள் கார்த்திக், தென்னரசு, காசிநாதன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் வால்டாக்ஸ் சாலையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த பார்சல்கள், நடைபாதை கடைகள், விளம்பர பதாகைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.


Next Story