சென்னையில் வெளியேறும் கழிவுநீர் முழுவதையும் சுத்திகரிக்க சிறப்பு திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை மாநகரில் வெளியேறும் கழிவுநீர் முழுவதையும் சுத்திகரிக்க சிறப்பு திட்டம் வகுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஆய்வு
சென்னை நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையத்தில் ரூ.47.24 கோடி மதிப்பில் 3-ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் போரூர் ஏரியில் நிரம்பும் வகையில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். பின்னர், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடித்து சோதனை ஓட்டத்தை தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக கோடம்பாக்கம் மண்டலம், அண்ணா பிரதான சாலை - எம்.ஜிஆர். நகர் மார்க்கெட் சந்திப்பு பகுதியில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த கழிவுநீர் குழாய்களை மாற்றியமைத்து மாற்றுப்பாதையில் கழிவு நீர் குழாய்கள் அமைக்கும் பணிகளையும், மேலும், இந்த வழித்தடத்தில் அமைக்கப்படும் கழிவுநீர் குழாய்களை எந்திரங்கள் மூலம் பராமரிப்பதற்கு ஏதுவாக புதிதாக 3 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கழிவுநீர் சுத்திகரிப்பு
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகரில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் 85 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கழிவுநீரை சுத்திகரித்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக 800 மில்லியன் லிட்டர் அளவிலான கழிவுநீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக இதுவரை 140 மில்லியன் லிட்டர் அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
கழிவுநீர் முழுவதும் சுத்திகரிப்பு
சென்னை மாநகரில் வெளியேறக்கூடிய கழிவுநீரை முழுவதுமாக சுத்திகரிப்பதற்கான சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும். நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையத்தில் கே..கே.நகர். பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் 10 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்யும் நிலையம் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர் போரூர் ஏரியில் நிரப்பப்படும். இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு பிறகு மாநகரின் பல்வேறு நீர்நிலைகளில் சுத்திகரிப்பு நீரை நிரப்பும் பணியை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பிரபாகரராஜா எம்.எல்.ஏ., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் சி.விஜயராஜ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story