திருச்சி மாநகரில் 1051 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு


திருச்சி மாநகரில் 1051 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 7:03 PM GMT (Updated: 22 Oct 2021 7:03 PM GMT)

திருச்சி மாநகரில் 1051 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.

மலைக்கோட்டை, அக்.23-
தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்களை தடுக்க திருச்சி மாநகரில் 1051 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று  திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.
காவல் உதவி மையம்
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, குற்றங்களை தடுக்கும் விதமாக திருச்சி மாநகரில், நந்திகோவில் தெரு, என்.எஸ்.பி. ரோடு சந்திப்பில் தெப்பக்குளம் அருகே தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 இந்த காவல் உதவி மையத்தினை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று காலை தொடங்கி வைத்து, கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஒவ்வென்றாக திரையில் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி மாநகர பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி, சிங்காரத்தோப்பு தெப்பக்குளம் உள்ளிட்ட கடைவீதி பகுதிகளில் 127 கண்காணிப்பு கேமராக்கள், 800-க்கும் மேற்பட்ட போலீசார், 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
100-க்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
கண்காணிப்பு கேமராக்கள்
 கடை வீதிகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். திருச்சி மாநகரத்தில் 95 சதவீத போலீசார் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேர் உடல்நலக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. திருச்சி மாநகரத்தை பொருத்தவரை தற்போது 1,051 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ஏற்கனவே பழுதான 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு செயல் பாட்டிற்கு வந்து விட்டது. இதனால் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளது.
முக்கிய கடைவீதிகளில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சக்திவேல், முத்தரசு ஆகியோர் உடனிருந்தனர்.
தற்காலிக வாகன சோதனை மையங்கள்
மேலும் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி நந்தி கோவில் சந்திப்பு, சின்னகடை வீதி பாபு ரோடு சந்திப்பு, பெரிய கடை வீதி, கிலேதார் ரோடு சந்திப்பு, சிங்காரத் தோப்பு பூம்புகார் எதிர்புறம் ஆகிய 4 இடங்களில் வாகன சோதனை மையங்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், குற்றத்தடுப்புக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியும் காவலர்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு சோதனை முழு அளவில் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையம், ெரயில்வே ஜங்ஷன் மற்றும் பிற முக்கிய பகுதிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் கொண்ட குழுக்கள் தனியாக வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகன நிறுத்துமிடங்கள்
இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள  மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் மற்றும் யானைகுளம் மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு மேலபுலிவார்டு ரோடு கெயிட்டி திரையரங்கம்உட்புறமுள்ள கார் நிறுத்துமிடம் மற்றும் பழைய குட்செட் ரோடு (சோபிஸ் கார்னர்) இறுதியில் உள்ள ரயில்வே மைதானம் ஆகிய இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story