கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகள் இயக்க தடை தொடரும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகள் இயக்க தடை தொடரும்என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை,
கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கொடைக்கானல் ஏரியையொட்டி 8 சென்ட் நிலம் கொடைக்கானல் படகு குழாமிற்காக குத்தகைக்கு விடப்பட்டது. கடந்த மாதம் 1-ந்தேதியுடன் குத்தகை காலம் முடிந்துவிட்டது. இந்தநிலையில், கடந்த 2009-ம் ஆண்டில் கொடைக்கானல் ஏரி முழுவதுமாக கொடைக்கானல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள 10 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான இடத்தை படகு குழாம் நடத்தியவர்கள் பயன்படுத்தி வந்தனர். அதோடு, அவர்களும், தனியார் ஓட்டல் நடத்தியவர்களும் இந்த ஏரியில் எவ்வித அனுமதியும் பெறாமல், நகராட்சிக்கு எந்த கட்டணத்தையும் செலுத்தாமல் படகுகளை வாங்கி விட்டு, கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே தனியார் படகுகளை ஏரியில் இயக்குவதை தடுக்கும் வகையில் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியை நடத்துவதற்கு வெளிப்படையான டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, படகு குழாமிற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கொடைக்கானல் படகு குழாம் கிளப் சார்பில் ஆஜரான வக்கீல், படகு குழாமிற்கு சீல் வைத்ததை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
அதை தொடர்ந்து நீதிபதிகள், கொடைக்கானல் படகு குழாம் அலுவலகத்திற்கு சீல் வைத்ததை அகற்றும்படி உத்தரவிட்டனர்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை தனியார் படகுகளை இயக்க விதித்த தடை தொடரும் என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story