கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள்


கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள்
x
தினத்தந்தி 23 Oct 2021 2:54 AM IST (Updated: 23 Oct 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலய பூஜை தொடங்கியது. இந்த பணிகளை 9 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலய பூஜை தொடங்கியது. இந்த பணிகளை 9 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூடலழகர் பெருமாள் கோவில்

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பழமை வாய்ந்த கோவில் கூடலழகர் பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் மதுரையில் ஒருமுறை தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தங்களை காக்கும் படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார்.
அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதலால் சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

திவ்ய தேசங்கள்

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இந்த கோவில் விளங்குகிறது. மேலும் தமிழகத்தில் மதுரை கூடலழகர் கோவிலிலும், சிவங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமி காட்சி தருகிறார். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ‘ஓம்‘ நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.
மேலும் இந்த விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்திலும், 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 3-வது நிலையில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார். கூடலழகர் பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருவது மிகவும் சிறப்பாகும். 125 அடி உயரம் கொண்ட இந்த விமானத்தில் 10 அடியில் கலசம் உள்ளது. மேலும் இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும்.

பல்லாண்டு பாடிய திருத்தலம்

பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு என்று பாடல் பாடிய திருத்தலம் ஆகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது.கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனது குறித்து அரசுக்கு கோவில் நிர்வாகம் தெரிவித்தது. அதை தொடர்ந்து தற்போது பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசு மதுரையில் முதன் முதலாக கூடலழகர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு வெளியிட்டது. அதன்படி சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் அனைத்தும் டி.வி.எஸ்.நிறுவனம் ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது.
கும்பாபிஷேக பணி தொடக்கம்
கும்பாபிஷேகத்தை யொட்டி கோவில் பாலாலாய பூஜை நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி பெருமாள் கோவில் உள்ளே தெற்கு பிரகாரத்தில் 9 நவ குண்டம் அமைக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் யாகசாலை பூஜையின் முடிவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் பாலாலயம் நடைபெறும்.
இது குறித்து கோவில் உதவி கமிஷனர் ராமசாமி கூறும் போது, முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கோவில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜை நேற்று தொடங்கியது. கோபுர வேலைகளை செய்வதற்காக அதில் உள்ள சக்தியை யாகசாலையில் பூஜையில் வைக்கப்பட்டுள்ள மரப்பலகையில் உள்ள சுவாமியின் மீது சக்தியை இறக்கப்படும். அதன் பின்னர் தான் கோபுர மற்றும் திருப்பணி வேலைகள் தொடங்கும்.

ரூ.1 கோடி மதிப்பில்

கோவில் திருப்பணிகள் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் செய்ய உள்ளோம். அதனை டி.வி.எஸ்.நிறுவனம் உபயமாக செய்து தருவதாக ஏற்று கொண்டுள்ளது.. அதிலும் ராஜகோபுர பணி மட்டும் மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் செய்து தருவதாக கூறியுள்ளார். பணிகள் அனைத்தையும் 9 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுளோம் என்றார்.

Next Story