ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியது


ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Oct 2021 3:05 AM IST (Updated: 23 Oct 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றி உள்ளது.

ஈரோடு
ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றி உள்ளது. 
ஈரோடு ஊராட்சி ஒன்றியம்
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தி.மு.க, அ.தி.மு.க தலா 3 இடங்களை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருந்தது. 3 முறை தேர்தல் தேதி அறிவித்தும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டுமே வந்து இருந்தனர்.
அ.தி.மு.க கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் 4-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் இறந்ததை தொடர்ந்து மீண்டும் 4- வது வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதில் தி.மு.க. சார்பில் 4-வது வார்டில் போட்டியிட்ட விவேகானந்தன் வெற்றி பெற்றார். இதனால் தி.மு.க.வின் பலம் 4 ஆக உயர்ந்தது.
தலைவர்-துணைத்தலைவர்
இந்த நிலையில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனைத்து கவுன்சிலர்களும் வந்த பின்னர் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல், வட்டார வளர்ச்சி அலுவலர் பசீர் அகமது முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க. சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேரோடு பிரகாசும், துணைத்தலைவராக தி.மு.க. சார்பில் 4-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விவேகானந்தனும் தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story