தொடர்ந்து 22-வது நாளாக விலை உயர்வு: ஈரோட்டில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது


தொடர்ந்து 22-வது நாளாக விலை உயர்வு: ஈரோட்டில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 23 Oct 2021 3:06 AM IST (Updated: 23 Oct 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தொடர்ந்து 22-வது நாளாக நேற்றும் பெட்ரோல் -டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டி உள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் தொடர்ந்து 22-வது நாளாக நேற்றும் பெட்ரோல் -டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டி உள்ளது.
புதிய உச்சம்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தேர்தல் நடக்கும் சமயத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை அதே நிலையில் நீடிப்பதும், அதன் பின்னர் வழக்கம்போல் விலை உயர்வதுமாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தமட்டில் இந்திய எண்ணை நிறுவனம் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதன் எதிரொலியாக சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது
கடந்த 1-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் உயர தொடங்கியது. கடந்த 22 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இந்தநிலையில் ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 99 காசுக்கு விற்பனையானது. நேற்று மேலும் 31 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாய் 30 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் 99 ரூபாய் 99 காசுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் நேற்று மேலும் 34 காசுகள் விலை உயர்ந்து 100 ரூபாய் 33 காசுக்கு விற்பனை ஆனது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

Next Story