ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் ஜெயிலில் இருந்தபடி ஜெயித்த பெண்
எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் நெடுங்குன்றம் ஊராட்சி துணைத்தலைவராக ஜெயிலில் இருந்தபடி பெண் தேர்வானார்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் சூர்யா. பிரபல ரவுடியான இவர் மீது ஓட்டேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நெடுங்குன்றம் 9-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு அவரது மனைவி விஜயலட்சுமி மனுதாக்கல் செய்திருந்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 20-ந்தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விஜயலட்சுமி ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.
போட்டியின்றி தேர்வு
அப்போது அங்கு வந்த ஓட்டேரி போலீசார் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமியை கஞ்சா வழக்கில் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
விஜயலட்சுமி நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு தனது வக்கீல் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விஜயலட்சுமியை எதிர்த்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சி சார்பிலும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சிறையில் இருந்தபடியே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைமுக துணைத்தலைவர் தேர்தலையொட்டி நெடுங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story