குன்றத்தூர் அருகே மாயமான வாலிபரை கொன்று விட்டதாக 4 பேர் கோர்ட்டில் சரண் - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு


குன்றத்தூர் அருகே மாயமான வாலிபரை கொன்று விட்டதாக 4 பேர் கோர்ட்டில் சரண் - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
x
தினத்தந்தி 23 Oct 2021 9:59 AM IST (Updated: 23 Oct 2021 9:59 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே மாயமான வாலிபரை கொன்று விட்டதாக கோர்ட்டில் சரணடைந்த 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 33), திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி டீக்கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும், குன்றத்தூர், ஒண்டி காலனி பகுதியை சேர்ந்த ரவி என்ற சிக்கா ரவிச்சந்திரன் என்பவர் அழைத்து சென்றதாகவும் காணாமல் போன சிலம்பரசனின் மனைவி தேவி 2 நாட்களுக்கு முன்னர் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிக்கா ரவியையும் அவனது நண்பர்களான விக்னேஷ், பிரவீன் குமார், வருண், கோவிந்தராஜ் ஆகியோரையும் சந்தேகத்தின் பேரில் தேடி வந்தனர். இந்த நிலையில் வருண் (19), விக்னேஷ் (21), பிரவீன்குமார் (21), கோவிந்தராஜ் (23), ஆகியோர் சிலம்பரசனை கொலை செய்து விட்டதாக கூறி கோர்ட்டில் சரண் அடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சரண் அடைந்த 4 பேரும் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிலம்பரசனை ஏன் கொலை செய்தார்கள்? உடலை என்ன செய்தார்கள்? உண்மையாகவே கொலை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை செய்ய கோர்ட்டில் சரண் அடைந்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகு தான் முழுமையான தகவல் தெரியவரும் என குன்றத்தூர் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள சிக்கா ரவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர் மீது சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story