மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தம்


மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தம்
x
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தம்
தினத்தந்தி 23 Oct 2021 6:27 PM IST (Updated: 23 Oct 2021 6:27 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் நடுவழியில் நிறுத்தம்

மேட்டுப்பாளையம்


மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர். 130 ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்த இந்த மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.


இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு அருகே அடர்லி-ஹில்குரோவ்ரெயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. 

இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று காலை 7.30 மணிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரெயில் கல்லாறு ரெயில் நிலையம் அருகே நடு வழியில் நிறுத்தப்பட்டது.
 இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த மலை ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது.

இந்த ரெயில் பாதையை சீரமைக்கும் பணிக்காக மேட்டுப் பாளையத்தில் இருந்து பி.டி.ரெயிலில் கம்பரசர் எந்திரம் ஏற்றப்பட்டு பகல் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. கல்லார் ரெயில் நிலையத்தை அடைந்ததும் என்ஜினுக்கு தேவையான தண்ணீர் நிரப்பப்பட்டது. 

பின்னர் அங்கிருந்து மீண்டும் பி.டி ரெயில் புறப்பட்டு மண்சரிவு ஏற்பட்ட இடத்தை அடைந்தது.
மலை ரெயில் இருப்புப்பாதை முதன்மை பிரிவு பொறியாளர் விவேக்குமார், மேட்டுப்பாளையம் மலை இரயில் இருப்புபாதை பொறியாளர் கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம், குன்னூர் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இதில்  தண்டவாளத்தில் விழுந்துகிடந்த பாறைகளில் துளையிட்டு கம்பரசர் மூலம்  வெடிவைத்து தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டன. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே  நிர்வாகம் அறிவித்தது.

Next Story