புகார் பெட்டி
புகார் பெட்டி
பயணிகள் நிழற்குடை
பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் பஸ் நிறுத்த பகுதியில் சாலையின் இருபுறமும் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் திறந்த வெளியில் பஸ்சுக்காக காத்திருந்து அவதி அடைகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருணாசலம், ஜோதிபுரம்.
பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பறைகள்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்துவதற்காக 5-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் உள்ளது. இந்த கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி கிடக்கின்றன. இதனால் அங்கு சிலர் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பயன்பாடின்றி கிடக்கும் கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
முகமது, பாம்பேகேசில், ஊட்டி.
போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி கேஷினோ சந்திப்பு பகுதியில் இருந்து பிரிக்ஸ் பள்ளி சாலையோரத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் மீது உரசி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும்.
பிரியா, நொண்டிமேடு, ஊட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சின்னவேடம்பட்டியில் மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரே சாலையோரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. மேலும் அதன் அருகிலேயே மலை போல குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், சின்னவேடம்பட்டி.
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
கூடலூரில் உள்ள துப்புக்குட்டிபேட்டை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் வெளியாகி அருகில் உள்ள குடிநீர் கிணற்றுக்குள் கசிகிறது. இதனால் அந்த குடிநீரை குடிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஏற்கனவே டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
கேதீசுவரன், கூடலூர்.
அதிக கட்டணம் வசூல்
குன்னூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை சரியான முறையில் பராமரிப்பது இல்லை. ஆனால் அதை பயன்படுத்துவோரிடம் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அது அதிகமாக உள்ளது. சரியாக பராமரிக்காத நிலையில், அதிக கட்டணம் வசூலிப்பது பயணிகளிடையே மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், குன்னூர்.
பிளாஸ்டிக் கழிவுகள்
கோத்தகிரி பாண்டியன் பூங்கா அருகே சாலையோரத்தில் செல்லும் நீரோடையில் சிலர் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் நீரோடை சுருங்குவதுடன், நீரோட்டம் தடைபட்டு, நீராதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே நீரோடையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசாத், கோத்தகிரி.
தெருநாய்கள் தொல்லை
மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ. மெயின்ரோட்டில் இருந்து செம்மொழி நகர் வரை செல்லும் வழி, அன்னை வேளாங்கண்ணி நகர், முதியோர் இல்ல பகுதி ஆகிய இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோரை தெருநாய்கள் துரத்தி கடிக்க முயல்வதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.
தீபிக் ஷா ரமேஷ், மேட்டுப்பாளையம்.
கரடி நடமாட்டம்
கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா வளாகத்தில் தரம் பிரிப்பதற்காக கொட்டி வைக்கப்படும் குப்பைகளில் உள்ள உணவு பொருட்களை தின்பதற்காக கரடி ஒன்று முகாமிட்டு இருக்கிறது. இதனால் அங்கு பணிபுரிபவர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டி நிலை உள்ளது. எனவே அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன், கோத்தகிரி.
தேங்கி நிற்கும் மழைநீர்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் கட்டப்பட்டு உள்ள மழைநீர் கால்வாய் பணி முழுமையாக முடியவில்லை. இதனால் அங்குள்ள பஸ் நிலைய பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு வரும் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாய் பணியை விரைந்து முடித்து மழைநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
குமரகுருபரன், கிணத்துக்கடவு.
குண்டும், குழியுமான சாலை
கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட சொலவம்பாளையம் ஊராட்சியில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
ரவிகுமார், குமாரபாளையம்.
ஆபத்தான தென்னை மரம்
ஆனைமலை அருகே சேத்துமடை மெயின்ரோடு எம்.ஆர்.சி. நகரில் ஒடையகுளம் பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்குள்ள ஒரு தென்னை மரத்தின் அடிப்பகுதி 80 சதவீதம் அரிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த தென்னை மரம் எந்த நேரத்திலும் சாய்ந்து, அருகில் உள்ள மின்கம்பம் மீது விழ வாய்ப்பு உள்ளது. அப்போது பெரும் விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான அந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.
தனலட்சுமி, வேட்டைக்காரன்புதூர்.
புதர் சூழ்ந்த கட்டிடம்
கோவை-பொள்ளாச்சி மெயின்ரோட்டில் உள்ள கிணத்துக்கடவு பழைய போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மேலும் புதிய போலீஸ் நிலைய கட்டிடம், பழைய போலீஸ் நிலையகட்டிடத்தின் பின்பகுதியில் உள்ளதால், அதனை புதர் செடிகள் மறைக்கும் அளவிற்கு வளர்ந்து உள்ளது. எனவே புதர் செடிகளை வெட்டி அகற்றுவதோடு பழுதடைந்த போலீஸ் நிலைய கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தர்மலிங்கம், கிணத்துக்கடவு.
Related Tags :
Next Story