வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளை
துடியலூர்
கோவை அருகே ஜி.என்.மில் அதிர்ஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் ஒரு ஐஸ் கிரீம் நிறுவனத்தின் டீலராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முதல் மாடியில் வழக்கம் போல் தூங்கினார். அந்த குடியிருப்பு பகுதியில் இரவு காவலாளிகள் பணியில் உள்ளதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தரைத்தளத்தில் உள்ள பின்வாசல் கதவு பூட்டை உடைத்து இவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். பின்னர் அந்த நபர்கள் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.1½ கோடி மதிப்பிலான 4 வைர நெக்லஸ்கள், 50 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள 3 வீடுகளில் அந்த நபர்கள் அடுத்தடுத்து திருட முயன்று உள்ளனர். அந்த வீடுகளின் பூட்டு உடைத்து உள்ளே சென்ற அவர்கள் விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால் திரும்பி சென்று உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் எழுந்த சீனிவாசன் வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் நகைகள் வைத்திருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் கனி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது.
பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் கொள்ளை நடைபெற்ற வீடு மற்றும் கொள்ளை முயற்சி நடைபெற்ற 3 வீடுகளில் கொள்ளையர்களின் கைரேகைகள் ஏதும் பதிவாகி உள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொள்ளை நடைபெற்ற வீட்டின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக அந்த கும்பல் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்து உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இவர்கள் 3 பேரும் தங்களது முகத்தை முற்றிலும் மறைத்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, சுப்பிரமணியப்பாளையம் செல்லும் சாலை மற்றும் குடியிருப்பை சுற்றி உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 3 பேர் மட்டும் ஈடுபட்டார்களா? வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாநகர் பகுதிகளில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து இருந்த நிலையில், புறநகர் பகுதிகளிலும் தற்போது கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டு உள்ளது.
-
Related Tags :
Next Story