பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது


பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 23 Oct 2021 9:21 PM IST (Updated: 23 Oct 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

பொள்ளாச்சி

பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.இதனால் சாமி தரிசனம் செய்ய  பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. 

சாமி தரிசனத்துக்கு தடை

பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சியில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. 

இதற்கிடையில் ஆழியாறு, அங்கலகுறிச்சி, ஆனைமலை பகுதியில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

 சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதற்கிடையில் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டு இருந்த பந்தலின் மேற்கூரை சரிந்து விழுந்தது. 

இதையடுத்து பாதுகாப்பு கருதி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆழியாறு அணை

ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் மின் உற்பத்திக்கு பின் தண்ணீர் திறக்கப்பட்டதால் அப்பர் ஆழியாறு அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,600 கன அடிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.


Next Story