தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது-மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி
தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது, என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.
மதுரை,
தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது, என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.
பேட்டி
மதுரை அரசரடி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசின் 4 மாத கால ஆட்சி அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கும் வகையில் உள்ளது. அதற்கு அத்தாட்சியாக இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை மக்கள் தந்திருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இடங்களிலும் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
வருகிற நவம்பர் 1-ந்தேதி, மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்த நாள். அந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தனிக்கொடியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், அன்றைய தினத்தில் சங்கரலிங்கனார் நினைவை போற்றும் வகையில் அவரது பெயரில் விருதுகள் அறிவிக்க வேண்டும்.
வேடிக்கை பார்க்கிறது
கொரோனா காலகட்டத்தில் கைதட்டியது, விளக்கேற்றிய விவகாரத்தில் பிரதமருக்கு குற்ற உணர்வு மேலோங்கி உள்ளது. அதனை தற்போது வெளிப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சிகளை அவர் விமர்சிக்கிறார்.
வேறு எந்த ஒரு நாட்டிலும் கொரோனாவை ஒழிக்க கைதட்டியது கிடையாது. இதுவேடிக்கையாக இருந்தது. அது சரியல்ல என்பதை இப்போதுதான் மோடி உணர்ந்திருக்கிறார்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவது, கொடூரமாக கொலை செய்வது நின்றபாடில்லை. தற்போது கோட்டைப்பட்டினம் மீனவர் ஒருவர் மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொடூரம் சகிக்கமுடியாதது. தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது கண்டனத்திற்குரியது. சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இலங்கை சிறையில் சிக்கி இருப்பவர்களையும் மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொடியேற்றி வைத்தார்
பின்னர் டி.கல்லுப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடியேற்றி வைத்தார். முன்னதாக அவருக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன், நகர் செயலாளர் ரவி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story